அழகான என் வாழ்க்கை பயண நினைவுகள். Episode 02

அந்த பணத்தை பாக்குறப்ப இந்த பணம் இருந்தா நம்மளால நமக்கு பிடிச்ச மாதிரி அந்த சைக்கிள் வாங்க முடியும்ல அப்படின்னு தோணிச்சு. ஆனா இந்த டைம் அந்த பணத்தை நாம  திருடக்கூடாது ஆனா நமக்கு இந்த பணம் வேணும் அப்படின்னு தோணிச்சு. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுனு ஒரு  பத்து நாளா யோசிச்சிட்டு இருந்தேன். அந்த பத்து நாள்ல நாம அந்த சைக்கிளை ஓட்டுனா  எப்படி இருக்கும்னு  கற்பனை பண்ணிப் பார்த்துட்டு இருந்தேன். 


அப்படி எல்லாம் யோசிக்கறப்ப  எப்படியாவது சைக்கிளை வாங்கணும் அப்படிங்கறது மட்டும்தான் மனசுல  ஓடுச்சு.
அப்புறம் நிறைய பேர் கிட்ட இந்த சைக்கிள் எவ்ளோ காசு வரும்னு விசாரிச்சேன்.  எல்லோரும் 1500 ரூபாய்  கிட்ட வரும்னு சொன்னாங்க. 
அதுக்கப்புறம் நாமலே அந்த காசு சேத்து வச்சு வாங்கலாம்னு முடிவு பண்ண. வழக்கம்போல் எங்க வீட்டுல செய்யுற வேலை எல்லாம் செஞ்சு முடிச்சிட்டு , எங்கள் தெருவில் உள்ள வீட்டிற்கும் சென்று வேலை செஞ்சேன்.  தினமும் பத்து ரூபாய் கிடைக்கும்.

அதுக்கு அப்புறம் எங்க தெருவில ஒருத்தவங்க வீடு கட்டினாங்க அங்க போய் கல்லு மண்ணு மரம் இதெல்லாம் தூக்கி கொடுத்தேன் அவங்க சம்பளம் கொடுப்பாங்க. அடிக்கடி எவ்வளவு பணம் நம்மகிட்ட இருக்கு அப்படின்னு செக் பண்ணிட்டே இருப்பேன்.  கிடைக்கிற வேலை எல்லாம் செஞ்சி ஒரு வழியா 1.5 வருஷத்துல Rs 1750 சேர்த்து வச்சுட்டேன். எனக்கு இந்த பணத்தை என்னி பார்க்கறப்ப எப்படியோ சேர்த்துவிட்டோம்  இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நமக்கு சைக்கிள் கிடைத்துவிடும் என்று  ரொம்ப சந்தோசமாக இருந்தேன்.

எங்க அம்மாவிடம் இந்தப் பணத்தைக் கொடுத்து நான் சேர்த்து வச்சேன் இத வச்சி எனக்கு சைக்கிள் வாங்கி கொடுங்க அப்படின்னு கேட்டேன். ஆனால் எனக்கு கிடைத்த பதில் சற்றும் நான் எதிர்பார்க்காத பதில். நம்ம குடும்பத்துல நிறைய கஷ்டமா இருக்கு இப்போ இந்த சைக்கிளை வாங்குனோம்னா  மத்தவங்க எல்லாம் ஏதாச்சும் சொல்லுவாங்க கடன்காரர்கள் எல்லாம் திட்டுவாங்க. அதனால இப்போ வாங்க வேண்டாம் அப்படின்னு சொல்லி அனுப்பிட்டாங்க. இப்படி சொன்னதும்  எனக்கு பயங்கரமா  அழுகை வந்துடுச்சு.


அதுக்கப்புறம் என்னடா காசு திருடினாலும் நமக்கு கிடைக்க மாட்டேங்குது சரி நாம சம்பாரிச்சு சேர்த்துவைத்து வாங்கலாம் நினைச்சாலும் நமக்கு கிடைக்க மாட்டிங்குதுனு நான் சாப்பிடல தூங்கல அப்படியே தினமும் உட்கார்ந்து இருந்தேன். அப்புறம் எங்க வீட்ல இதுக்காகத்தான் நான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்தேன் எனக்கு வேணும்னு அடம் பிடித்தேன். அதுக்கப்புறம் வாங்குறதுக்கு சம்மதம் சொன்னாங்க. அந்த சைக்கிளை வாங்கினதுக்கு அப்புறம் நான் ஒட்டுறப்ப கிடைச்ச சந்தோஷம் என் வாழ்க்கையில நான் மறக்கவே முடியாது.  எனக்கு அப்படியே பறக்குற மாதிரி இருந்துச்சு.



அதுக்கப்புறம் நான் படிச்ச பள்ளி அரசு பள்ளி. அங்க எதுவுமே சொல்லித் தர மாட்டாங்க . ஆனா என்னோட நண்பர்கள் கொஞ்சம் பேர் தனியார் பள்ளியில் படிச்சாங்க. அவங்க எல்லாம் கொஞ்சம் புதுசா படிச்சாங்க பேசினாங்க செஞ்சாங்க. என் நண்பர்கள் எல்லாரும் ஆங்கிலம் வார்த்தைகளெல்லாம் படிப்பாங்க, ஆனா எனக்கு படிக்க வராது. எனக்கு எதுவுமே தெரியல ‌. அதை பத்தி நான் யோசித்துக்கொண்டே இருந்தேன் நமக்கு மட்டும் ஏன் இதெல்லாம் தெரியலனு. அப்புறம் நிறைய பேர் சொல்லும் போது தான் புரிந்தது நான் படிக்கிற பள்ளி தான் அதற்கு காரணம்னு. அதுக்கப்புறம் நானும் அவர்கள் படிக்கும் பள்ளியில் போய் படிச்சா நாமளும் அதுபோல பேசலாம்ல  அப்படின்னு யோசிச்சேன். 

எங்க அம்மா கிட்ட போய் சொன்னேன் அடுத்த வருடம் நான் அந்த தனியார் பள்ளியில் போய் படிக்கணும்னு . அதுக்கு எங்க அம்மா சொன்ன பதில் நானே உன்னை இந்த வருஷத்தோட பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு நெசவு செய்ய சொல்லலாம்னு இருக்கேன். நீ அங்கே போய் எல்லாம் படிக்க வேண்டாம். நம்ம இருக்கிற நிலைமைக்கு நாம அது எல்லாம் ஆசைப்படக்கூடாது. நீ இனிமேல் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் நெசவு வேலை தான் செய்ய வேண்டும்னு சொல்லிட்டாங்க. ஏற்கனவே குடும்ப சூழ்நிலையின் காரணமாக என் அக்காவின் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு நெசவு வேலை செய்யச் சொல்லிட்டாங்க. என் அக்காவும் என் அம்மா சொல்வதை அப்படியே செய்து விடுவாள். ஆனால்‌ நான் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை நான் படித்தே தீருவேன் என்று ஒத்த காலில் நின்னேன்.

அது தனியார் பள்ளி மற்றும் பேருந்தில் பயணம் சென்று படிக்க வேண்டும் இதற்கு நிறைய செலவாகும் என்பதால் எங்கள் வீட்டில் பிடிவாதமாக மறுத்து விட்டனர். நான் அங்கு தான் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். பள்ளி விடுமுறைகள் எல்லாம் முடிந்து எட்டாம் வகுப்பு திறக்கப்படுகிறது. நான் படித்த பள்ளியில் TC கேட்டேன். இந்த பள்ளியில் TC தர மறுத்துவிட்டார்கள் எட்டாம் வகுப்பு முடித்ததால்  தருவோம் என்று உறுதியாகச் சொல்லி விட்டார்கள். பள்ளி தொடங்கி 10 நாட்கள் கடந்துவிட்டது நான் வகுப்பறைக்குச் செல்லவே இல்லை. எனக்கு தனியார் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று உறுதியாக நின்றேன். பெற்றோர் இல்லாமல் TC தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். பிறகு எனது சொந்தக்கரர் ஒருவரை வைத்து பள்ளியில் பேசி வாங்கி விட்டேன். 

அந்த தனியார் பள்ளிக்கு நான் மட்டும் தனியாக சென்று நான் இந்த பள்ளியில் சேர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அந்தப் பள்ளி அலுவலகத்தில் உள்ளோர்கள் பெற்றோரை கூப்பட்டு வா என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். எனக்கு என் பெற்றோரை கூப்பிட பயம். என்ன செய்வது என்று தெரியாமல் நான்கு நாட்களாக சுற்றிக் கொண்டிருந்தேன். பிறகு என் தெருவில் ஒரு அண்ணன் அந்த பள்ளியை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அந்த பள்ளிக்கு எங்கள் வீட்டு இடத்திலிருந்து மைதானத்திற்காக‌ இடம் கொடுத்தோம் என்று மற்றவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அதைக் கேட்ட நான் அந்த அண்ணனிடம் சென்று அந்த பள்ளியில் என்னை சேர்த்து விட முடியுமா என்று கேட்டேன். 
அவரும் என்னை இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தப் பள்ளிக்கு அழைத்துச் சென்று தலைமையாசிரியரிடம் என்னை இந்தப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளும்படி கூறினார்‌ . அந்த தலைமையாசிரியர் என்னிடம் 2, 3 கேள்விகள் கேட்டார். அது என்ன கேள்வி என்றால் பேனாவை ஆங்கிலத்தில் எப்படி அழைப்பார்கள் என்று கேட்டார். எனக்குத் பதில் தெரியவில்லை. அப்புறம் Book & pencil க்கு Spelling கேட்டார் அதுவும் எனக்கு தெரியவில்லை. இறுதியாக அந்த தலைமையாசிரியர் இந்த பையனை நாங்கள் சேர்த்துக் கொள்ள முடியாது வேறு பள்ளியில் நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்  என்று வெளியில் அனுப்பி விட்டார். அந்த அண்ணனும் சரி நாம் வேறு பள்ளியில் முயற்சிக்கலாம் என்று என்னிடம் கூறிவிட்டு நீ வீட்டிற்கு செல் எனக்கு வேலை உள்ளது நான் வெளியே செல்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். நான் வீட்டுக்கு செல்லாமல் பள்ளியின் வாசலில் கண்ணீருடன் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தேன்.

எனக்கு வீட்டிற்கு செல்ல மனமில்லை.மீண்டும் தலைமையாசிரியர் அறையை நோக்கி சென்றேன். அவரை சந்தித்து பேசினேன். என்னை எதற்கு இங்குச் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். எனக்கு இந்தப் பள்ளியில் தான் படிக்கணும் என்று கேட்டேன். அதற்கு அவர் இங்கு படிக்க வேண்டும் என்றால் அடிப்படை கல்வி தெரிந்திருக்க வேண்டும். அதைக் கற்றுக்கொண்டு திரும்ப வா நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்.


 நான் சிறிது நேரம் அங்கேயே ஏதும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தேன். பிறகு அவரிடம் சென்று ஐயா இதற்கு முன் நான் படித்த பள்ளியில் எனக்கு எதுவும் சொல்லித் தரவில்லை அதனால் எனக்கும் எதுவும் தெரியவில்லை. ஆனால் என்னுடன் பழகும் என் நண்பர்களுக்கு நிறைய தெரிகிறது. அவர்களிடம் கேட்டபோது இந்த பள்ளியில்தான் படித்துக்கொண்டு உள்ளேன் என்று சொன்னார்கள். அவர்களைப்போல் நானும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் அதனால் தான் இந்தப் பள்ளிக்கு சேர வந்தேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கண்ணீருடன் நின்றேன். 

   

திடீரென்று அந்த தலைமையாசிரியர் உன் பெற்றோர் எங்கே அவர்களை நாளை அழைத்து வா நான் உன்னை சேர்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டார். நான் அந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை . என் பெற்றோரால் வர இயலாது நீங்கள் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அந்த அறையின் வாசலில் நின்று விட்டேன். மாலைவரை அந்த அறை வாசலிலேயே நின்றதைப் பார்த்த தலைமை ஆசிரியர் சரி வா என்று என்னை அந்தப் பள்ளியில் சேர்த்துக் கொண்டார்கள் நாளை முதல் நீ பள்ளிக்கு வரலாம்.  அந்த அலுவலகத்திற்கு செல் மற்ற விவரங்களை அவர் உனக்கு தெரியப்படுத்துவார் என்று என்னை அனுப்பி வைத்தார். நான் சேர்த்து வைத்திருந்த 1250 ரூபாயைக் கொடுத்து அன்று இந்த பள்ளியில் சேர்ந்தேன்.


 மறுநாள் நான் பள்ளிக்கு வந்து வகுப்பறைக்கு செல்லும் போது தலைமையாசிரியர் என்னை பார்த்து நீ ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் உன்னை வீட்டிற்கு அனுப்பி விடுவேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.அந்தப் பள்ளியில் சேர்ந்த பிறகு எனக்கு படிப்பதற்கு மிகவும் கடுமையாக இருந்தது ஏனென்றால் நான் படித்த பள்ளிக்கும் இந்த பள்ளிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. இப்படியே இரண்டு வருடங்கள் கடந்தது. இது தனியார் பள்ளி என்பதால் வருட வருடம் பள்ளிக் கட்டணம் புத்தக கட்டணம் என பணம் தேவைப்பட்டது. 
அதிகமான பணம் தேவைப்பட்டதால் ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன். அப்போது என் கிராமத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் குப்பை தூய்மை செய்யும் பணிக்கு ஆள் தேவைப்பட்டது. எனக்கு பணம் தேவைப்படுகிறது இதைவிட்டால் வேறு வேலை கிடையாது என்பதற்காக எந்த வேலையாக இருந்தாலும் செய்ய தயாரானேன்.



 அந்த வேலையின் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து எனது பத்தாம் வகுப்பை முடித்தேன்.  எனக்கு ஆரம்ப கல்வி சரியாக தெரியவில்லை என்று என்னை சேர்க்க  மறுத்த அதே பள்ளியின் விளம்பரப் பலகையில் எங்கள் பள்ளியின் சாதனையாளர்கள் என்று என்னுடைய பெயரும் பொறிக்கப்பட்டது. அந்த தருணம் என்னால் மறக்கவே முடியாது. அதற்கு காரணம் என்னவென்றால் நான் கணிதத்தில் 99/100 எடுத்திருந்தேன். 


Part 3
 to be continued.....  

Comments